Wednesday, March 12, 2014

ஸ்ரீ ஜகத்குரு சந்த்ரசேகர ஸரஸ்வதி சுப்ரபாதம்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||



ஸ்ரீ ஜகத்குரு சந்த்ரசேகர ஸரஸ்வதி சுப்ரபாதம்


கச்சித் திருமடத்தில் கண்கண்ட தெய்வமான
கலைவாணி ரூபமொத்த கற்கண்டே! கதிர்முகனே!
மெச்சித் திருநாமம் செப்பிடுவோர் தம்வாழ்வில்
வினைநீக்கி அருள்புரியும் சங்கரனே! எழுந்தருள்வாய்!


காவித் திருவணியில் திருத்தண்டம் கையேந்தி
ஞானத் திருவுருவாய் பீடமேற்றப் பெரியோனே! 
போதம் எமக்குருளி பெருவாழ்வு தந்தோனே!
இருள்நீக்கி ஒளிசேர்க்கும் சங்கரனே! எழுந்தருள்வாய்!

பூதியுரு கொண்டே பூவிழியால் அருளாலன்
பூத்தத் திருவுருவாய் புவியிதனில் உதித்தோனே!
வேத மறையாவும் விளங்கிடவே அருள்செய்த
ஞான அருள்புரியும் சங்கரனே! எழுந்தருள்வாய்!


ஞாலம் தழைத்தோங்க அருட்பாத நடையோடே
நாளும் திக்விஜயம் நல்கியதோர் பேரீசா!
பாதம் அருட்கமலம் பதம்போதும் நல்வாழ்வும்
நாளும் பெற்றிடுவோம் சங்கரனே! எழுந்தருள்வாய்!


நேயம் தான்கொண்டே ஒற்றுமையும் செழித்தோங்க
பேதம் தானில்லாப் பெருவாழ்வும் கிட்டிடவே
ஞானம் அருளோனே! நற்குருவே! மெய்பொருளே!
நாளும் அடிபணிவோம் சங்கரனே! எழுந்தருள்வாய்!


ஈச்சங் குடிதனிலே உனையீன்ற எழில்பெற்றோர்,
ஈய்ந்த சிவனார்தம் திருப்பாதம் போற்றிடுவோம்!
காந்த எழிலோனே! கற்பகமே! பொற்பதமே!
சாந்த முகத்தோனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!


அண்டும் அடியவர்தம் குறைபோக்கி நலமளிக்கும்
பண்பும் பெருமாண்பும் அருளுரைத்தப் பெரியோனே!
கண்டும் ஒளிபெறவே சன்னதியை நாடிவந்தோம்
வேதம் தழைத்தோனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!


அவனியர் அனைவர்க்கும் அருள்வேண்டி தவமேற்ற
அனுஷத்தில் அவதரித்த மறைபொருளே! மாகேசா!
ஆயிரம் பிறைபோலே அருள்புரியும் சந்திரரே!
ஆழியில் காப்போனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!


ஒன்பது கோளரவம் ஒருநாளும் தீண்டாது
ஓதும் மறைநான்கும் ஒருமித்தே காப்பதுபோல்
சீர்குருவாம் நின்பதமும் நாடிவந்தோம் அற்புதமே!
சற்குருவே! காஞ்சி சங்கரனே! எழுந்தருள்வாய்!


அகமேற்கும் எண்ணங்கள் நல்லனவாய் இருந்திடவும்
எண்ணிய கருமங்கள் நற்பதமாய் நடந்திடவும்
நடக்கும் நிகழ்வேதும் நிற்கதியாய் பொய்யாது
நலமேற்க அருள்புரிய சங்கரனே! எழுந்தருள்வாய்!


தானம் பெரிதென்றும் தாய்மை உளமேற்க
தயவாய் சொற்கூறி சதுர்வேத நெறிதந்தே
ஞாலம் சீர்பொங்க நல்கிடுவாய் பேரருளை
ஞான சசிசேகர சங்கரனே! எழுந்தருள்வாய்!


செல்வச் சீர்பேறும் கல்விக் கலையாவும்
வீரம்திளை மனமும் வேண்டியுமை சரணடைந்தோம்!
சிந்தை தெளிந்தேகி சீர்வாழ்வும் எமக்கருள
சசிசேகர ஸரஸ்வதியே! சங்கரனே! சரணம்! சரணம்!!


பெரியவா சரணம்!                                                                             பெரியவா சரணம்!
                                                 ஸ்ரீமஹாபெரியவா அபயம்!
           

- சாணு புத்திரன்.

No comments:

Post a Comment