Monday, July 28, 2014

குருப்புகழ்

பெரியவா சரணம்.

கலியுகத்தில் குருகடாக்ஷம் மட்டும் நம்மிடம் இருக்குமானால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நாம் வெகுசுலபமாக விடுபட்டு விடலாம் எனும் மஹாசூட்சுமத்தினைத் தான் கோடானுகோடி மஹான்கள் நமக்கு அறிவுருத்தியுள்ளார்கள் என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை.

நான் வெகுவாய் தமிழ் அறிந்தவனல்ல; ஸ்ரீ மஹாஸ்வாமியை நினைந்துருகும் பக்தகோடிகளின் நிழல்களில் (ஸ்)வாசிக்கும் ஒரு அணு அவ்வளவே!

எந்தன் இதயத்துத் துவாரங்களில் இருந்து உருகி வழியும் ஒரு ப்ரார்த்தனையே இந்த குருப்புகழ்!  இதனில் தவறேதும் வாராது, ஐயன், ஆச்சார்யன், கலியுக மஹாதெய்வத்தின் பேரருள் காக்கட்டும்!



மாரி பொழியுமுன் கான மயிலென
சோகங் களைந்தருள் குருநாதா!
பாரில் திருவென போத மருள்தரு
போத மெனவரும் பெருமானே!
நாத னுன்பதம் நாளுந் தொழுதிட
பாதம் பணிந்தனை குருநாதா!
சீல னுறைதலம் சேர்ந்த மனமிதும்
நாளும் மகிழருள் பெருமானே!
வேத மறைகளின் ஞான மருள்தரும்
தேவ னுறைபதம் குருநாதா!
கோளுந் தருவினை போக்கி நலந்தரும்
கோவி னருள்தரும் பெருமானே!
காலம் தருவினை யாவும் பெறுவதும்
நாளும் துணைவரும் குருநாதா!
நாடும் நின்பதம் நல்கு மருளொடு
நாளும் அகம்புகும் பெருமானே!
காஞ்சி தலமுடை காவி யுருதிரு
வாகி அருள்புரி குருநாதா!
வாஞ்சி யுருவினிற் காட்சி தருமிறை
யாகி நலந்தரும் பெருமானே!

இந்த வலைப் பகுதியினைத் தேடி வந்து இதனைப் படிக்க முற்படும் ஒவ்வொரு மனங்களிலும் உறைந்துள்ள எம்பெருமான் ஸ்ரீ மஹாஸ்வாமியே இதனைப் படித்து ஏற்பதாய் நினைந்து இங்கு பகிர்கின்றேன்.

பெரியவா கடாக்ஷம்!
நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.


குருப்புகழ்

தமிழ் கடவுள் முருகன்; அருணகிரி மஹான் தமது திருப்புகழில் குமரனிடம் கல்யாண மாலைக்கென ஒரு அற்புதமான திருப்புகழைப் பாடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

அங்ஙனமே இந்த அடியேனும் கலியுகக் கடவுளான ஸ்ரீமஹாஸ்வாமியிடம் பக்தர்களுக்காக கல்யாணமாலை வேண்டிப் பாடும் குருப்புகழ் இது.

இதனை மனதார ஏற்றருளி கல்யாணமாலை வேண்டிடும் பக்தர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் அருளவேண்டி நம் பரமாச்சார்யாள் பாதம் பணிகின்றேன்.

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.